உயிருள்ள வாழ்வு


"தென்னைய பெத்தா இளநீரு

 பிள்ளையை பெத்தா கண்ணீரு" 

- தமிழ் பழமொழி


அன்று மாலை அந்த முதியவர் அவர் இளைய மகள் பிறந்த ஆண்டில் நட்ட மாதுளை மரத்தடியின் அருகில் கருங்கல் தரையில் உட்கார்ந்திருந்தார். 

எண்பத்தெட்டு குளிர்காலங்கள் அவரை துரத்தி வந்துவிட்டன, ஆனால் அவரது கண்கள் இன்னும் இலையைத் தின்னும் சின்னஞ்சிறு பூச்சியைக் கூடத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும். அவர் கைகளால் கடந்த முப்பது வருடங்களாக உருவாக்கிய தோட்டம் அவரைச் சூழ்ந்திருந்தது: சின்னஞ்சிறு சூரியன்கள்போல சாமந்திப்பூக்களும் , இரவில் மொட்டு திறக்கும் மல்லிகையும் , யாரும் பறிக்காத உயரத்தில் இருக்கும் கொய்யாமரமும் அவர் உருவாக்கிய ராஜாங்கம். 

பிள்ளைகள் எல்லாம் பறந்து போய்விட்டார்கள்—சிலர் உயரமான கட்டடங்களுக்கு நடுவேயும் , சிலர் கடல்களைக் கடந்தும்.

வாசற்படியில் ஒரு பலவீனமான பல்பு மட்டுமே எரிந்தது. அதற்குமேல் உள்ள மின்சார சாதனத்தை சல்லடை போட்டு தான் தேடவேண்டும்.

கைபேசியில்லை, காலிங் பெல் இல்லை, மருந்து புட்டிகளை தவிர தொழில்நுட்பம் எதுவும் தொடாத பூமியின் ரகசிய பகுதி அந்த தோட்டம்.

பிள்ளைகளின் ஒளிரும் முகங்களை நினைத்து தலையை தூக்கியபடி பெருமூச்சுடன் அவர் அடிக்கடி சொல்வார்: “கண்ணாடி தொட்டு பேசுனாலும் , கரண்ட் வயர் வழியா பேசுனாலும் அவங்க மூச்சு என் மேல படமாட்டுது சாமி ; ரெண்டு நா கரண்டு போட்டுமே எல்லா பயலும் என்ன பண்றதுனு தெரியாம செரகுள்ள சிக்கிப்பாணுவோ. தோ ! இருக்கற செதம்பரத்துக்கு போவ யோசிக்கிறானுவோ.. இவனுவோதான் ஒலகத்த மாத்த போராநோலாக்கும்”

பிள்ளைகள் சில சமயம் பணம் அனுப்புவார்கள், வெளிநாட்டிலோ , வேரூரிலோ இருக்கும் பேரப்பிள்ளைகளின் படங்கள் பக்கத்து வீட்டு பையன் வந்து காட்டுவான்—அவர் ஒருமுறைகூடத் முகம் கொடுத்து பார்த்ததில்லை. அவராக வெளியூர் செல்ல நினைத்தாலும் செடிகள் கையை பிடித்துக்கொள்ளும். மனைவியை இழந்த பிறகு, நண்பர்கள் ஒவ்வொருவராகப் பிரிந்த பிறகு, தோட்டமே அவரது உலகமாக ஆகிவிட்டது. பறவைகளோடு எழுவார் , புளிய மரத்தின் மேல் நிலா வருகையில் தூங்குவார். ஒவ்வொரு செடியோடும் பேசுவார், அவை பதிலளிப்பது அவருக்கு மட்டுமே கேட்கும்.

“பெரியண்ணே, நெனவிருக்கா!” என்று அந்த  மா மரத்தை கூப்பிடுவார். அந்த மரம் அவர் அண்ணனின் வயதை ஒத்தது. இப்படியாக அவரை சூழ்ந்த எல்லா உறவும் அவருடன் மரமாகவும் செடியாகவும் பின்னி இருக்கும். பெரிய புளியமரம் அவர் ஆயா சொன்ன கதைக்கு பிறகு பேய் மரமாக மாறிவிட்டது. நினைவுகள் உயிர்களாக மண்ணில் அவரோடு இருந்தன. 

கரகரப்பான அடிமரத்தை தொட்டு, “கஜா புயல் நெனவிருக்கா அண்ணே ? பாதி கெள காத்தோட முறிஞ்சிடுச்சி , ஆனா நீ என்ன விட்டு எங்கயும் போல” என்று சொல்வார்.

ரோஜாக்களிடம், அவர் வாலிப நாட்களை நினைவு கூறுவார். மனைவியின் அழகை கூட்ட பூ கொடுத்த ஒவ்வொரு செடியிடமும் காதல் மலர்ந்த கதையை சொல்வார். துளசியிடம் , சனிக்கிழமை பெருமாளுக்காக இலையை பறித்த நாட்களைச் சொல்வார்.

சில நாட்களுக்கு முன் ஆற்றங்கரையில் ஒரு ஆட்டின் வாயிலிருந்து பிடுங்கிய சின்னப் பச்சை மிளகாய்ச் செடியை தடவி நின்றார் . அன்று ஆட்டை மெதுவாகத் திட்டி, செடியைப் பிடுங்கி, வேஷ்டியின் ஓரத்தில் மறைத்து ஓட முயல்வதை போல நடந்தே வீடு வந்து சேர்ந்தார் , ஆடுக்கும் அவருக்கும் நடந்த ஒட்டப்பந்தயத்தில் வேஷ்டியில் மறைத்து வெற்றிபெற்றார். நாளுக்கு இருமுறை தண்ணீர் விட்டார், மற்ற செடிகளைவிட அந்த நொண்டி செடியிடம் மெதுவாகப் பேசினார். 

இன்று காலை அதன் முதல் சின்ன மிளகாயைப் பறித்தார்— அவர் சிரிப்பை போல அது பச்சையாக இருந்தது . கடித்ததும் காரம் உடனடியாக எழுந்தது. உலர்ந்த கன்னங்களில் கண்ணீர் உருண்டது. ஏன் அழுகிறோம் என்று அவருக்குத் தெரியும்: அவர் போன பிறகு இந்த மிளகாய்ச் செடியோடு யாரும் பேச மாட்டார்கள். இந்த நொண்டி செடி மறுபடியும் ஆட்டு வாய்க்கே போய் விடுமோ என்று கலங்கினார்.

இப்போது ஒரு சின்னக் காகிதத்தை மடியில் வைத்து நடுங்கும் எழுத்தில் மெதுவாக எழுதிக்கொண்டிருந்தார்:

அன்புள்ள 
அண்டை வீட்டுக்காரர்களே, பஞ்சாயத்தே, என் பிள்ளைகள் திரும்பி ஒருவேளை வந்தால் அவர்களுக்கு நான் எழுதுவது,

நான் இறந்ததும் என்னைத் தூரமாக எடுத்துச் செல்லாதீர்கள். இங்கேயே, மிளகாய்ச் செடிக்கும் மல்லிகைக்கும் நடுவே ஒரு குழி தோண்டுங்கள். இவ்வளவு நாள் நான் புரட்டிய அதே சிவப்பு மண்ணால் என்னை மூடுங்கள். என் எலும்புகள் என்னை நேசித்த வேர்களுக்கு உரமாகட்டும். என்னை எரிக்காதீர்கள், ஆற்றுக்கும் அனுப்பாதீர்கள். இனிமேல் பயணிக்க விருப்பமில்லை.

கல் வைக்க வேண்டுமென்றால் பெரிய எழுத்து வேண்டாம். இதை மட்டும் எழுதுங்கள்:
அவர் செடிகளோடு பேசினார், அவை கேட்டன.

நன்றி.

கையொப்பம் போட்டு, காகிதத்தை மடித்து, பழைய டிரங்க் பெட்டியில் வீட்டுச் சாவியோடு வைத்தார். பிறகு செடிகளுக்கு நடுவே இன்னொரு முறை நடந்தார்—இலைகளைத் தொட்டு, மெல்லிய குரலில் “நாளைக்கு பாக்கலாம் ” என்றார் , அது விடைபெறுவதைப் போல ஒலித்தது.

தோட்டத்தில் ஈர மண்ணின் வாசனையும் வரப்போகும் மழையும் நிறைந்திருந்தன. அவர் சிரித்தார்—களைப்பும் அமைதியும் கலந்த சிரிப்பு—பனை மரத்தடியில் ஒரமாய் உட்கார்ந்தார்,. தன் அடுத்த பருவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தன மனிதனும் தோட்டமும்.

Living with life

 The old man sat on the stone floor beneath the pomegranate tree, the one he had planted the year his youngest daughter was born. Eighty-eight winters had chased him, but his eyes were still finds small insect that eats his love. Around him stretched the garden he had built with his own hands over the last thirty years. Rows of Saamandhi like small suns, jasmine that opened only at night, a guava tree heavy with fruit. His children had all flown long ago (some to cities with tall buildings, some across oceans). A single weak bulb glowed above the door, beyond that bulb there was no electricity, no phone, no screen.

He often said, shaking his head at the thought of his children’s glowing rectangles, “I can’t hear their breath through glass and wires; I hate talking to people who jail themselves inside machines.”

They sent money sometimes, photographs of grandchildren he had never held. After his wife died, and then his friends one by one, the garden became his whole world. He woke with the birds, slept when the moon rose above the neem tree. He spoke to every plant as though it could answer.

“Good morning, old mango,” he would say, touching the rough bark. “Remember the storm in Gaja? You lost half your branches, but you stood.”
To the roses he whispered thanks for every flower that elevated his wife beauty on every evening. To the mint he told stories of the days when his wife crushed the leaves for week-end biriyani.

A few days ago he had found a small green chilli sapling half-chewed in a goat’s mouth near the riverbank. He had scolded the goat, pulled the broken plant free, and carried it home wrapped in the end of his dhoti. He planted it near the gate, watered it twice a day, spoke to it more softly than to the others. This morning he picked its first tiny chilli, bright as hope. When he bit into it, the heat rose sharp and sudden, and tears rolled down his dry cheeks. He knew why he cried: no one would talk to this chilli plant after he was gone. No one would save that dwarf chill after him.

Now he sat with a small paper on his knee, writing slowly in trembling handwriting.

To whom it may concern,
my neighbours, the panchayat, my children if they ever return,

When I die, do not take my body far. Dig a grave here, between the chilli plant and the jasmine. Cover me with the same red soil I have turned with these hands for thirty years. Let my bones become food for the roots I loved. Do not burn me, do not send me to the river. I have no wish to travel any more.

If you must put a stone, write nothing grand. Only this:
He spoke to plants, and they listened.

Thank you.

He signed his name, folded the paper, and placed it inside an old biscuit tin along with the house key. Then he walked once more between the rows, touching leaves, saying quiet goodnights that sounded like goodbyes.

The garden smelled of wet earth and coming rain. He smiled, tired but peaceful, and sat again beneath the palm tree to wait for his season.